×

மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் 19,634 மாணவ, மாணவிகள் ‘நீட்’ எழுதினர்

*கடும் சோதனைக்கு பிறகே அனுமதி

மதுரை : மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை. தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் நேற்று நடந்த நீட் தேர்வை 19 ஆயிரத்து 634 மாணவ, மாணவிகள் எழுதினர். தீவிர சோதனைக்குப்பின்னர் தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். வேதியியல் பாடம் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதி விட்டு வந்த மாணவ, மாணவிகள் கூறினர்.

தேசிய தேர்வு முகமை சார்பில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நேற்று நடந்தது. மதுரையில் யாதவர் ஆண்கள் மற்றும் பெண்கள் கல்லூரிகள், இரு கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளிட்ட 13 மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வுக்கு வந்தவர்கள் அட்மிட் கார்டு, அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டனர். செல்போன், பணம், பேனா, பென்சில் கொண்டு செல்லவும், முழுக்கை சட்டை, பெல்ட், வாட்ச் அணிந்து செல்லவும் அனுமதிக்கப்படவில்லை. மாணவிகள், ஷால், கம்மல், தோடு, கொலுசு, பாசிமணி உள்ளிட்டவற்றை பெற்றோரிடம் கொடுத்து விட்டு வரும்படி அறிவுறுத்தப்பட்டது. மாஸ்க் அணிந்து வரவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

தேர்வுக்கு வந்தவர்கள் வெப்பமானி மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு, உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல் 2 மணிக்கு தேர்வு துவங்க இருந்த நிலையில், காலை 11 மணி வரை முதல் 1.30 மணி வரை தேர்வு அறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பகல் 1.31க்கு நுழைவு வாயில்கள் மூடப்பட்டன. மாணவர்களுடன் வந்த பெற்றோர் மையங்களுக்கு வெளியே ஆங்காங்கே அமர்ந்திருந்தனர். அனைத்து தேர்வு மையங்கள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டத்தில் 9,139 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 8,957 பேர் தேர்வு எழுதினர். 182 பேர் ஆப்சென்ட். தேனி மாவட்டத்தில் 792 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். 773 பேர் தேர்வு எழுதினர். 19 பேர் ஆப்சென்ட் ஆகினர். திண்டுக்கல் மாவட்டத்தில் 2,988 மாணவ, மாணவிகள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில் 2915 பேர் தேர்வு எழுதினர். 73 ஆப்சென்ட் ஆகினர். சிவகங்கை மாவட்டத்தில் 5 தேர்வு மையங்களில் 1,843 மாணவ, மாணவிகள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.

இதில் 1,793 பேர் தேர்வு எழுதினர். 50 ேபர் ஆப்சென்ட் ஆகினர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 தேர்வு மையங்களில் 2003 விண்ணப்பித்திருந்தனர். இதில் 1978 பேர் எழுதினர். 25 பேர் ஆப்சென்ட் ஆகினர். விருதுநகர் மாவட்டத்தில் 3,295 மாணவ, மாணவிகள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில் 3,218 பேர் தேர்வு எழுதினர். 77 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

மதுரை, தேனி, சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் நேற்று நடந்த நீட் தேர்வுக்கு 20 ஆயிரத்து 60 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 19 ஆயிரத்து 634 பேர் தேர்வு எழுதினர். 426 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள், வேதியியல் பாடம் கடினமாக இருந்ததாக தெரிவித்தனர்.

The post மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் 19,634 மாணவ, மாணவிகள் ‘நீட்’ எழுதினர் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Ramanathapuram ,Sivakangai ,Theni ,Thindugul ,Virudhunagar ,Sivaganga ,Didigukal ,Virutunagar ,Dindigul ,
× RELATED விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டத்தில்...